Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கையெல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்து விட்டார் திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு:

திரு.வி. கலியாண சுந்தரனார் காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் (தற்போது தண்டலம்) என்னும் ஊரில் 1883 ஆகஸ்ட் மாதம் 26 அன்று விருத்தாச்சனார் – சின்னம்மையாருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூரைச் சேர்ந்தவர்கள்.

கல்வி:

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விருத்தாசல முதலியார் 1890 ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டைக்குக் குடியேறினார். திரு.வி.க.வின் கல்வி ராயப்பேட்டை ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடைவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரின் பள்ளிப் படிப்பும் முடிந்தது.

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். கதிரைவேற் பிள்ளை தீவிர சைவ சித்தாந்தவாதி. தமிழை ஆழ்ந்து பயின்றவர்.

கதிரவேற்பிள்ளையின் இறப்பிக்குப் பிறகு மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களை கற்றார்.

கதிரைவேற் பிள்ளை செல்வாக்கின் கீழ் தமிழ் கற்ற கலியாண சுந்தரனார் இயல்பாகவே சைவசிந்தாந்தத்தின் பால் ஈடுபாடு கொண்டார். இளம் பருவத்தில் அவரே சொல்வதுபோல “உடல் தடித்தவன்” மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தந்ததில்லை. சைவத்துக்கு எதிரான கருத்துக்களை ஆதரித்ததும் இல்லை.

ஆசிரியர் பணி:

1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனிமையானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.

பத்திரிக்கை பணி:

தேசபக்தன் பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகவும், அதன் பிறகு திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்காக பெரும் தொண்டாற்றினார். பத்திரிகையில் பணியாற்றிய காலங்களில் தினந்தோறும் வெளியான தலையங்கங்களிலிருந்து தமிழ் மொழியின் வன்மை இத்தகையது என்பதைத் தமிழர்கள் கண்டு கொண்டார்கள். திரு.வி.க வின் தலையங்கங்கள் ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்களின் உள்ளங்களில் தேச பக்திக் கனலை மூட்டியது. அத்துடன் தமிழ் ஆர்வமும் பொங்கிப் பெருகச் செய்தது. தூய தமிழில் சொல்ல முடியாத பொருள் ஒன்றுமில்லையென்பது பலருக்கும் தெளிவாயிற்று. பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து திரு.வி.க பற்பல அழகிய சொற்களைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்து தற்கால அரசியலில் விவாதங்களில் உபயோகப்படுத்தினார். “அடடா! தமிழ் இத்துணை வளமுள்ள மொழியா?” என்று அனைவரும் வியந்தார்கள்.

அரசியல் பணி:

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் அரும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டும், பல நூல்களை எழுதியும் சிறப்படைந்தார்.

படைப்புகள்:

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை என்ற நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு:

இயற்கையோடியைந்த இன்பத்தையும் இன்பத்தோடியைந்த இயற்கையையும் பற்றி இடைவிடாது சிந்தித்தும் பேசியும் எழுதியும் வந்த ஞானி திரு.வி.க 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை ராயபேட்டை கணபதி முதலியார் தெருவில் இருந்த வீட்டில் இயற்கையோடு இயைந்து இன்பத்தோடு ஒன்றிவிட்டார்.

அந்நாள்களில் பொதுமேடைகளில் நல்ல தமிழ் பேசுவோர் எவரும் இலர். அயல்மொழியான ஆங்கிலமும் ‘அக்ராசனர் அவர்களே, மகா ஜனங்களே, நமஸ்காரம்’ என்கிற நரகல் நடை சமற்கிருதமுமே கோலோச்சின. தூய தமிழில் இனிக்க இனிக்க ஏடெழுதுவோர் இல்லாதிருந்த காலமது. அந்த நேரத்தில் தான் செந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் வரவு வாய்த்தது.

காய்ச்சிவைத்த பசும்பாலில் கழுநீரைக்

கலந்ததுபோல் நன்றில் தீதைப்

பாய்ச்சிவைத்துப் பிழைப்பாரும், பாழ்பட்ட

தமிழர்களும் வாழும் நாட்டில்

பேச்சுவைத்த தோடுகனி பிழிந்துவைத்துச்

சுத்தவாய் பேச வைத்து

மூச்சுவைத்துத் தமிழர்களை முடுக்கியஇத்

தலைமுறையை வாழ்த்துகின்றேன்

என்று மேடைத்தமிழிலும் எழுத்துத் தமிழிலும் புதுப்பாதை தொடங்கி வைத்த திரு.வி.க.வின் தொண்டினைப் பாவேந்தர் போற்றுகிறார்.

இத்துயர் தமிழ்நாட்டில் எனைமகிழச்

செய்தளவாய் இருப்ப வற்றுள்

முத்தமிழ்வாய் உழைப்பாளிக் குழைக்குந்தோள்

அன்புள்ளம், தமிழ் எழுத்தை

வித்தியுயர் விளைக்கும்விரல், தமிழருக்கோர்

தீமைஎனில் விரைந்தோடுங்கால்

இத்தனைகொள் கலியாண சுந்தரனார்

என்ற பொதுச் சொத்தும் ஒன்றே என்று திரு.வி.க.வின் உடல்உறுப்புகள் அனைத்தையும் தமிழ்நாட்டின் பொதுச் சொத்தாக்கிய பெருமை பாவேந்தரையே சாரும்.

Categories: General Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *