Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
 • துளசிச்செடியின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். இதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப்போடப் படை நீங்கும்; விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன அடங்கும்.
 • கீழாநெல்லியை கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி எனவும் குறிப்பிடுவர். இது மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வருகிறது.
 • காய்களுடன் கூடிய முழுக் கீழாநெல்லிச்செடியைத் தூயநீரில் கழுவி அரைத்து விழுதாக்கிக் கொள்ளல் வேண்டும். ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை இருநூறு மில்லி லிட்டர் எருமைத்தயிருடன் கலந்து, காலை ஆறு மணியளவில் வெறும்வயிற்றில் உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் தீரும்.
 • மருந்துண்ணும் நாளில் மோரும், மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்றுகிராம் அளவு காலை மாலை இருவேளை நாலுநாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.
 • தூதுவளைக்கு தூதுளை, சிங்கவல்லி என வேறுபெயர்களும் உண்டு.
 • இதன் இலைகளை நல்லெண்ணெயில் சமைத்து உணவோடு சேர்த்து இருபத்தொரு நாள் உண்டு வந்தால், சுவாசகாசம் அகலும்; இளைப்பு இருமல் போகும்.
 • வள்ளலார்  தூதுவளையை ஞானப்பச்சிலை எனப்போற்றுகிறார்.
 • தூதுவளை குரல்வளத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீட்டிக்கும்.
 • குப்பைமேனி நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடியாகும். இதன் இலைகளைக் காயவைத்துப் பொடியாக்கிப் பூசினால், படுக்கைப் புண் குணமாகும்.
 • குழந்தைகளின் வயதுக்கேற்ற அளவில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும்; வயிறு தூய்மையாகும்; பசியைத்தூண்டும்; இலைகளுடன் மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும்.
 • மேனி துலங்க குப்பைமேனி என்பது பழமொழி.
 • வறண்டநிலத் தாவரமான கற்றாழையில் பலவகையுண்டு.
 • சோற்றுக்கற்றாழையே மருந்தாகப் பயன்படுகிறது. இதன் தோலை நீக்கிச் சோற்றுப் பகுதியைக் குறைந்தது பத்து முறையேனும் கழுவுதல் வேண்டும். அப்போதுதான் அதன் கசப்புத்தன்மையும் வழுவழுப்பும் நீங்கும்.
 • நூறு கிராம் அளவு கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்து நூறு மில்லி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துவர முடிவளரும்; அதனால், இரவில் நல்ல உறக்கம் வரும்.
 • மஞ்சள் சேர்த்துக் காயம்பட்ட இடத்தில் பூசினால் காயம் குணமாகும்.
 • இதனைப் பசும்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச்சூடு குறையும்.
 • கற்றாழைக்குக் குமரி என்னும் வேறுபெயரும் உண்டு.
 • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதனால் குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு என்னும் வழக்கு ஏற்பட்டது.
 • முருங்கைப்பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்; வீக்கத்தைக் குறைக்கும். முருங்கைக்கீரை கண்பார்வையை ஒழுங்குபடுத்தும்; உடலை வலுவாக்கும், இரும்புச்சத்து நிறைந்துள்ளதனால் கூந்தலை வளரச் செய்வதில் இதற்குப் பெரும் பங்குண்டு.
 • கறிவேப்பிலையும் மூலிகையே. மணத்திற்காக மட்டும் உணவில் சேர்க்கப்படும் இலையாக இதனைக் கருதுதல் கூடாது. ஒரு மண்சட்டியில் முந்நூறு மில்லி அளவு பசுவின்பாலை ஊற்றி வேடு கட்டுதல் வேண்டும் (வேடு கட்டுதல்- சட்டியின் வாயை மெல்லிய துணியால் மூடிக் கட்டுதல்). அதன்மீது கறிவேப்பிலையின் காம்பு நீக்கிய கொழுந்து இலைகளைப் போட்டுச் சிறுதீயில் அவித்தல் வேண்டும். அதனை விடக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் மூன்று நாளில் குணமாகும்.
 • காலை, மாலை என இருவேளையும் ஐந்து கிராம் கறிவேப்பிலையைக் கழுவிச் சிறிதுசிறிதாக வாயிலிட்டு மென்று விழுங்கினால், சீதபேதி இருநாளில் குணமாகும்.
 • உணவில் சேரும் சிறுநச்சுத்தன்மையை முறிக்கும்தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.
 • கரிசலாங்கண்ணி இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சட்காமாலை முதலிய நோய்களுக்குக் கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அது, கண்பார்வையைத் தெளிவாக்கும்; நரையைப் போக்கும்.
 • கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் : கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.
 • மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும்.
 • முசுமுசுக்கைக் கொடியின் வேரைப் பசுவின்பாலில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி, சருக்கரையுடன் உண்டு வந்தால் இருமல் நீங்கும்.
 • அகத்திக்கீரை, பல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும்.
 • வல்லாரை நினைவாற்றல் பெருக உதவும்.
 • வேப்பங்கொழுந்தைக் காலையில் உண்டு வந்தால், மார்புச்சளி நீங்கும். வேப்பிலையை அரைத்துத்தடவினால் அம்மையால் வந்த வெப்புநோய் அகலும்.
Categories: General Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *