Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தமிழகத்தின் அன்னிபெசன்ட் – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

இன்று ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தக் காலத்திலே பெண் சீர்திருத்தக் கருத்துகளுடன் இப்படியொரு பெண் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும் வகையில் போராட்டங்கள், சொற்பொழிவுகள், அரசியல் ஈடுபாடு, எழுத்து, புதிய சிந்தனைகள் எனத் தாம் வாழும் காலத்தைச் பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

இராமாமிர்தம் அம்மையாரின் பொதுத்தொண்டு காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் தொடந்தன.

பிறப்பு :

திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி – சின்னம்மாள் தம்பதிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் 1883 இல் பிறந்தவர்.

இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட இனத்துப் பெண்களை, உண்டு கொழுத்த பணக்காரக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தொடர்கதையாக நடந்துவந்ததைத் தட்டிக்கேட்க யாருமில்லாதிருந்தது. இந்த அடிமைப் பிரிவைச் சேர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர்தான் ராமாமிர்தம் அம்மையார்.

தேவதாசி முறையை எதிர்த்ததாலேயே, ராமாமிர்தம் அம்மையாரின் தந்தைக்குப் பலரும் இன்னல் கொடுக்க விரக்தியின் விளிம்பில் சென்ற அவர் ஒருநாள் திடீரென மாயமானார். இதனால் கடும் வறுமையில் சிக்கிய ராமாமிர்தத்தின் தாயார் இவரை பத்து ரூபாய் மற்றும் ஒரு பழைய சேலைக்கு ஒருவரிடம் விற்றார்.

வளர்ந்து பருவப்பெண்ணான ராமாமிர்தம் அம்மையாரைத் திருமணம் என்ற போர்வையில் வேட்டையாடக் காத்திருந்தது 80 வயது அடைந்த கொழுத்த கிழம். ஆனால், அதை எதிர்த்து கடுமையாகப் போராடிய ராமாமிர்தம் அம்மையார், தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பேரளம் சுயம்புப்பிள்ளை என்பரை எவ்விதச் சமய சடங்குகளுமற்று நெய்விளக்கில் சத்தியம் செய்து வாழத் தொடங்கினர். அம்மையாரின் அனைத்துப் போராட்டங்களுக்கும் இவருடைய கணவர் துணையாய் நின்றார்.

இசையைக் குலத் தொழிலாகக் கொண்டதனால் இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் என பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரின் துணையுடன் 1917 இல் மயிலாடுதுறையில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். தேவதாசி ஒழிப்பு முறைக்கு அல்லும் பகலும் பாடுபட்டார். தேவசாசிகளை ஒருங்கிணைத்து மேடை முழக்கங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனை ஏற்காத பணக்காரர்கள், அரசியல்வாதிகள், ரவுடிகள் மட்டுமின்றி சொந்த இனத்திலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவித்துடன் நாடகமேடை ஏறி அம்மையாரின் கூந்தலைப் பிடித்து இழுத்ததோடு அறுத்தும் ஏறிந்தனர். அதனைப் பொருட்படுத்தாது, பொறுமை கடலினும் பெரிது என்று எண்ணித் தம் குறி்க்கோளை முழு மூச்சாய்ச் செயல்படுத்தினார்.

காந்தியத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்தார் அம்மையார். பேச்சாளர்கள் எதையும் பேசக்கூடாது என்று ஆங்கிலேயர் கட்டளையிட்டிருந்தனர். அக்கட்டளையை மதிப்பதுபோலக் காட்டித் தமது கொள்கையை நிலை நிறுத்துவதில் அம்மையார் உறுதியோடு இருந்தார். எனவே, தாம் பேச நினைத்த கருத்துகளை எல்லாம் கரும்பலைகையில் எழுதி மக்கள் முன்னிலையில் வைத்தார். காந்தியடிகள், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியா திரும்பினார். அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர். இதனால், சினம் கொண்ட அம்மையார், மூவர்ணக் கொடியை ஆடையாக அணிந்து கொண்டார்.

அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். தீண்டாமை, தேவதாசிமுறை, குழந்தைத் திருமணம், கைம்மை நோன்பு முதலிய சமூகக்கேடுகளை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தார்.

காங்கிரசில் இணைந்து அப்போது அந்தக் கட்சியில் இருந்த பெரியார் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே தேவதாசி முறைக்கு ஆதரவாளர்கள் இருந்ததால் அந்தக் கட்சியிலிருந்து பெரியாருடன் வெளியேறி போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.

இறுதியில், தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் முதுபெரும் தலைவர், “தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும்” என்று கொதித்தார். அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்” என்றார். இதனால் சர்வமும் ஒடுங்கிப்போனார் அவர். டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாகப் பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்தான். இதன் பின்னர், நீதிக்கட்சி காலத்தில் 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் கொண்டுவரப்பட்டது.

தனது போராட்டங்களின்போது, ஆதிக்க வர்க்கம் இவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தியது. மேடையில் தலைமுடியை அறுத்தும் சித்ரவதை செய்தது. விஷம் கொடுத்தும் கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், உயிரை துச்சமாக மதித்து அனைத்து சதிவலைகளையும் முறியடித்ததால்தான், இன்றைய சமூகத்தில் அனைத்துப் பெண்களும் சமமாக பாவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

1936ல் சுயசரிதப் புதினமான “தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்” வெளியிட்டார். இந்நூலில் சோதிடம், மந்திரம், குறி சொல்லுதல் முதலிய குருட்டு நம்பிக்கைகளைப் பற்றியும் கடவுள், மோட்சம் இவைகளின் பெயரால் காலத்தையும் காசையும் விரயமாக்கும் அறிவீனத்தைப் பற்றியும் அம்மையார் விவாதப் பொருளாக விளக்கி எழுதிய விதம் படிப்போரைக் கிளர்ந்தெழச் செய்தது.

பொதுவாழ்வில் வாழ்ந்த காலம்வரை உயர்ந்த நோக்கத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இராமாமிர்தம் அம்மையார் தமது எண்பதாம் வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். இருப்பினும், தம் தொண்டால் தமிழக வரலாற்றில் தமக்கென அழியாப் புகழை நிலைநிறுத்திக் கொண்டார் எனில் அது மிகையாகாது.

இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகவும், அவரது நினைவாகவும் அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர்.மு.கருணாநிதி தான் அறிவித்துள்ள ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம் என பெயர் சூட்டி இன்று வரை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது தமிழக அரசு.

Categories: General Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *