TNPSC General Tamil

TNPSC General Tamil

சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா“எழுத்து” என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்ச கர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப் பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்“ போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.சி.சு.செல்லப்பா அவர்கள் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.  மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத்தண்டனையை அனுபவித்தவர். வாழ்க்கை முறைகளைக் நெறி பிசகாமல் கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். எழுத வேண்டும் என்ற ஆர்வம் அப்போதே அவருக்குப் பிறந்துவிட்டது.“சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது. அப்போது ஊர் சின்னமனூர் என்பதால் சி.எஸ்.செல்லப்பா என்று தலைப்பு எழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதி வந்தார். அறிஞர் வ.ரா., தமிழில் எழுதுமாறு சொல்ல, அது முதல் சி.சு.செல்லப்பா என்றே எழுதலானார்.அந்தக்காலச் சூழ்நிலையில் ஆரம்பகால எழுத்தாளர்களுக்குச் சற்று வித்தியாசமான எண்ணத்துடன் பார்வையுடன் எழுதுபவர்களுக்கு இடமும் ஊக்கமும் தந்த இதழ் மணிக்கொடி. அவர் எழுதிய “சரசாவின் பொம்மை” என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.எழுத்தார்வம் கொண்டவர்களால் சும்மாயிருக்க முடியாது. பத்திரிகை அலுவலகங்களில் படையெடுத்து, தங்கள் எழுத்துகளை வெளியிடச் செய்வது அல்லது சொந்தமாகப் பத்திரிகை ஒன்று தொடங்கித் தன்னுள் மூண்ட கனலை எழுதித் தணித்துக் கொள்வது என்ற போக்குத் தவிர்க்க முடியாதது.1937-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. பின்னர் மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947-ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். தினமணி வெளியிட்ட “சுடரை’க் – கதிர் ஆகப் பெயர் சூட்டிய பெருமை செல்லப்பாவினுடையது என்று அந்நாளில் கூறுவார்கள். பிடிவாத குணம் உடைய சி.சு.செ. தமிழ் இலக்கணக் கட்டுப்பாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர், தினமணி கதிர் என்பதை “தினமணிக் கதிர்’ என்று “க்‘ போடுவதை தொடக்கத்திலேயே ஆதரிக்கவில்லை. அந்த நாளில் அது ஒரு விவாதப் பொருள்.ஒரு கால கட்டத்தில் லட்சக்கணக்கில் விற்பனையான வார இதழாக கதிர் திகழ்ந்தது. புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். அவருக்கு முன்பே (க.நா.சுப்பிரமணியம்) க.நா.சு. திறனாய்வுக் கலைக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தார். க.நா.சு.வின் அணுகுமுறைக்கும் செல்லப்பாவின் அணுகுமுறைக்கும் வித்தியாசம் இருந்தது. விமர்சன எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் விமர்சனக் கலையை வளர்க்காமல் தனிப்பட்ட முறையில் போராடியதை வாசகர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.சிறுசிறு குழுக்களாகக் கூட்டம் கூடி காரசாரமாக விவாதிக்கும் எழுத்தாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.சு.செல்லப்பா, விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த “எழுத்து’ என்ற இதழைத் தொடங்கினார்.“சோதனை’ “புதிய வழித்தடம்‘ என்ற வார்த்தைகளை சி.சு. செல்லப்பா அடிக்கடி பயன்படுத்துவார். அவருடைய எழுத்தின் நோக்கமும் அதுதான். இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமான மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக “எழுத்து’ அமைவது போலவே இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைக்கும் “எழுத்து’ இடம் தரும் என்று எழுத்துவின் (எழுத்தின் என்று எழுதமாட்டார்) கொள்கையை அழுத்தம் திருத்தமாக விவரித்துள்ளார்.விமர்சன விவாதத்திலிருந்து சி.சு.செல்லப்பா “புதுக்கவிதை’ வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.க.நா.சு. “சந்திரோதயம்‘ இதழில் பணியாற்றிய போதுதான் அவருக்கு விமர்சன ஈடுபாடு ஏற்பட்டது. அந்த எண்ண வளர்ச்சியே “எழுத்து’ இதழ். விமர்சனத்துக்கு என்று “எழுத்து’ தொடங்கப்பட்டபோதிலும் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளும் விமர்சனங்களும் எதிர் விமர்சனங்களும் இடம் பெறலாயின.பலவித இன்னல்களுக்கிடையே 1970-ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை வெளிக்கொண்டுவந்த “எழுத்து’ ஆசிரியர் சி.சு.செல்லப்பாவின் சாதனை வரலாற்றில் அழியாதது. ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த “எழுத்து’ காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. பத்திரிகையின் கொள்கையை அடிக்கடி மாற்றுவதோ, அளவை மாற்றுவதோ விலையைக் கூட்டிக் குறைப்பதோ ஓர் இளம் பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தடையாகும் என்பதை செல்லப்பா உணரவில்லை.119 இதழுடன் “எழுத்து’ நிறுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பெரும் இழப்பு செல்லப்பாவுக்கு ஏற்பட்டாலும் பல புதுக்கவிதைப் படைப்பாளிகள், கவிஞர்கள் தமிழுக்குக் கிடைத்தனர்.சென்னை அக்னி அட்சர விருது, சிந்து அறக்கட்டளை விருது, இலக்கியச் சிந்தனையின் ஆதி, லட்சுமணன் நினைவுப் பரிசு, தஞ்சைப் பல்கலைக்கழகத் தமிழன்னை விருது, கோவை ஞானியின் அன்பளிப்பு, உதவிகள், நன்கொடை முதலிய எதையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.அவர் தமது முதிய வயதில், (எழுபத்தைந்துக்கு மேல் எண்பத்தைந்துக்குள்) ந.பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து, பி.எஸ்.ராமையாவின் கதைக்களம்… எண்ணூறு ஆயிரம் பக்ககங்கள் கொண்ட நூலாக வெளியிட்டது மிகப்பெரும் சாதனை என்றே கூறலாம்.சி.சு.செல்லப்பாவின் லட்சியமான “சுதந்திர தாகம்‘  நூலை வாழ்நாளில் அச்சிட்டு வெளியிட்டு விடவேண்டும் என்பதே அவருடைய இறுதி நாள்களில் ஏற்பட்ட ஆசை. தன் நெருங்கிய நண்பர்கள் நால்வரிடம் ஐயாயிரம் ரூபாய் வீதம் கைமாற்றாக வாங்கிக்கொண்டு அச்சிட்டு நூலை வெளியிட்டார். புத்தகம் வெளிவந்தவுடன் பரபரப்பாக அறுநூறு பிரதிகள் விற்பனையாகிவிட்டன.சுதந்திர தாகம் நாவலைப் பற்றி பின்னுரையில், பிரபல விமர்சக எழுத்தாளர் “சிட்டி’ (பெ.கோ.சுந்தரராஜன்) 1997 ஆம் ஆண்டு “”நாவல் என்ற அளவில் இந்த முயற்சி சிறந்த இலக்கியத் தரமும் கலையம்சமும் வாய்ந்தது. நாட்டு விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவ்வளவு பெரிய – விரிவான, ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்ட நாவல் இதுவரை வெளிவரவில்லை. செல்லப்பாவின் இலக்கிய வாழ்க்கைக்கு இந்த நாவல் சிகரம் வைத்தது போல் அமைந்திருக்கிறது’’ என்று தெரிவித்தார்.செல்லப்பாவின் மன உறுதி, வைராக்கியத்தோடு ஒரு செயலைச் செய்து முடிக்கும் குணம், கொள்கையில் வேறுபாடிருந்தாலும் நட்பில் விரிசல் கொள்ளா குணம் – இவை செல்லப்பா என்ற லட்சிய எழுத்தாளரை என்றும் நினைக்கத் தோன்றும்.மறைவு:சிறுகதை, குறுநாவல், கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாடகம் என இலக்கியத்தோடும், எழுத்தாளர்களுடனும், வாசகர்களுடனும் வாழ்ந்த சி.சு.செல்லப்பா, 1998-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி மறைந்தார். ஆனாலும் அவருடைய “எழுத்து’ லட்சியம் மறையவில்லை.வெளியிட்ட நூல்கள்:சிறுகதைத் தொகுதிகள்:• சரஸாவின் பொம்மை• மணல் வீடு• சத்யாக்ரகி• அறுபது• கைதியின் கர்வம்• செய்தகணக்கு• பந்தயம்• ஒரு பழம்• நீர்க்குமிழி• பழக்கவாசனை• சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்குறும் புதினம்:• வாடி வாசல்கட்டுரை: • தமிழில் சிறுகதை பிறக்கிறது• தமிழில் சிறுகதை முன்னோடிகள்• இலக்கிய விமர்சனம்• படைப்பிலக்கியம்• காற்று உள்ள போதே• ஏரிக்கரை• குறித்த நேரத்தில்• எல்லாம் தெரியும்• ஊதுபத்திப்புல்• மாயதச்சன்• பி.எஸ்.ராமையாவின்சிறுகதைப்பாணி நாவல்:• ஜீவனாம்சம்• சுதந்திர தாகம்நாடகம்:• முறைப்பெண்கவிதைத் தொகுதி:• மாற்று இதயம்குறுங்காப்பியம்:• இன்று நீ இருந்தால்திறனாய்வு:• ந. பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து• பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி• எனது சிறுகதைகள்• இலக்கியத் திறனாய்வு• மணிக்கொடி எழுத்தாளர்கள்விருதுகள்: இவரது மறைவிற்குப் பிறகு சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடமையாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *